விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தீர்த்தக்கரைப் பகுதியைச் சேர்ந்தவர்கள் நாகராஜன் மகன் அஸ்வின் (7), பாலமுருகன் மகன் மலையரசன் (9). கரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் விடுமுறையில் இருப்பதால் இருவரும் ஒன்றாகச் சேர்ந்து வீட்டின் அருகே விளையாடுவது வழக்கம்.
இந்நிலையில் இன்று (அக். 26) வழக்கம்போல் இருவரும் விளையாடிக் கொண்டிருந்தபோது அங்கு குப்பையில் கிடந்த பட்டாசு கழிவுகளுக்குத் தீவைத்துள்ளனர். அப்போது கழிவுகள் எதிர்பாராதவிதமாக வெடித்துச் சிதறியதில் சிறுவர்கள் இருவரும் பலத்த தீக்காயமடைந்து அலறித்துடித்துள்ளனர்.
சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த நகர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: கிருஷ்ணகிரி பட்டாசு கடையில் வெடி விபத்து