விருதுநகர்: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ரவிச்சந்திரனை அவரது இல்லத்தில் சந்தித்த பின் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் செய்தியாளார்களுக்குப் பேட்டியளித்தார்.
அப்போது, கால் நூற்றாண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்துவரும் ராஜீவ் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 7 பேர் விடுதலை குறித்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டும் விடுதலை குறித்து பதில் சொல்லாமல் ஆளுநர் காலம் தாழ்த்துவது 7 பேருக்கு இழைக்கப்படும் அநீதியாகும்.
எழுவர் விடுதலையில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணாக ஆளுநர் செயல்பட்டு தன் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதாக ஆளுநர் குறித்து வேல்முருகன் பகிரங்க குற்றச்சாட்டு வைத்தார்.
மேலும் அவர், ஆளுநர் கையொப்பமிட்டு விடுதலை செய்யும் வரை முதல்வரும் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சரும் இணைந்து இந்த 7 பேருக்கு நீண்ட கால பரோல் விடுப்பு வழங்க வேண்டும். மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கும் காங்கிரஸுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. 7 பேர் விடுதலையில் பாஜகவும் காங்கிரஸும் அரசியல் செய்வதாகவும், தமிழர்கள் என்றால் கிள்ளுக்கீரையாக நினைப்பதாகவும் குற்றஞ்சாட்டினார்.
ரஜினி குறித்த கேள்விக்கு, தமிழ்நாட்டில் நிலவும் பிரச்னைகளுக்கு பொதுமக்களும் பல்வேறு சங்கங்களும் அரசியல் கட்சிகளும் நடத்திவரும் போராட்டங்களை திசை திருப்பவே ரஜினி கடந்தகால வரலாற்றை தற்போது பேசி வருகிறார். இவை அனைத்தும் ஆர் எஸ் எஸ் திட்டம், அதை அவர் படித்து பின்பற்றி வருகிறார்.
தமிழ்நாட்டில் ஹைட்ரோ கார்பன், கூடங்குளம் அணு மின் நிலைய விரிவாக்கம், நீட் தேர்வு, சி.ஏ.ஏ., என்.ஆர்.சி., உள்ளிட்ட மக்கள் பிரச்னை குறித்து வாய் திறக்காமல் மவுனியாக இருந்துவிட்டு, மக்களை மடைமாற்றுவதற்காக தற்போது ஆர்எஸ்எஸ் திட்டத்தின்படி பெரியார் பற்றி அவதூறாக பேசியுள்ளார். ஆர்.எஸ்.எஸ் வலையில் ரஜினி சிக்கிவிட்டார், அவர்கள் தரும் வேலையை ரஜினி செய்து வருகிறார் என்றார்.