விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் விவசாயிகள், 10 ஆயிரம் ஹெக்டேர் தென்னை விவசாயத்தில் ஈடுபட்டுவருகின்றனர். அதில் குறிப்பாக ராஜபாளையம் பகுதியில் மூன்றாயிரம் ஹெக்டேர் தென்னை பயிரிடப்பட்டுள்ளது.
இதில் ஆயிரத்து 500 ஏக்கர் தென்னை மரங்களில் ரூகோஸ் வெள்ளை ஈக்கள், சுருள் வெள்ளை தாக்கப்படுவதால் தென்னை மரங்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
எனவே தென்னை மரங்களை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்பது குறித்து மத்திய திட்ட வேளாண்மை உதவி இயக்குநர் ராகேந்திரன், ராஜபாளையம் உதவி இயக்குநர், வேளாண்மை அலுவலர் தனலட்சுமி ஆகியோர் கலந்துகொண்டு விவசாயிகளுக்குப் பயிற்சியளித்தனர்.
அதில், சுருளாக நீள்வட்ட வடிவில் முட்டையிட்டு முட்டைகளை மெழுகுபோன்ற வெள்ளை நிற துகள்கள் மூடியிருப்பதால் இளம் குஞ்சுகள், முதிர்ந்த வெள்ளை ஈக்கள் ஓலையின் உள்புறத்தில் கூட்டமாக அமர்ந்துகொண்டு சாற்றினை உறிஞ்சி வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்துவதால் ரூகோஸ் வெள்ளை ஈக்கள் வெளியேற்றப்படும்.
தேன் போன்ற திரவம் இலைகளின் மேல் பகுதியில் விழுந்து பரவுகிறது. இந்த தேன் போன்ற திரவத்தின் மீது கரும்பூசணம் வளர்வதால் தென்னை ஓலையில் தற்காலிகமாக கருப்பு நிறமாக மாறிவிடும். இதனால், ஒளிச்சேர்க்கை தற்காலிமாக பாதிக்கப்பட்டு, தென்னை மரங்களின் வளர்ச்சி குன்றிவிடுகின்றது.
ஆகையால் தாக்கப்பட்ட மரங்களில் உள்ள கீழ்மட்ட ஓலைகளில் உள்பகுதியில் படுமாறு விசைத்தெளிப்பான் கொண்டு மிக வேகமாகத் தண்ணீரைப் பீய்ச்சி அடித்து தெளிப்பதன் மூலம் ஈக்களின் எண்ணிக்கை பெருகுவது குறையும்.
பைரித்திராய்டு, ரசாயன பூச்சிக்கொல்லிகள் நன்மைசெய்யும் பூச்சிகளை அழித்துவிடுவதால் அவற்றை அறவே பயன்படுத்தக் கூடாது. எனவே மிக அதிக அளவில் தாக்குதல் இருந்தால் என்கார்சியா, கிரைசோபிட் ஒட்டுண்ணிகள் இல்லாதபட்சத்தில் தேவைப்பட்டால் ஒரு லிட்டர் தண்ணீர் தாவர பூச்சிக்கொல்லி மருந்து அசாடிராக்டின் 2மி.லி., அல்லது வேப்பெண்னை 30மி.லி., என்ற அளவில் ஒரு மில்லி ஒட்டு திரவம் சேர்த்து தென்னை ஓலைகளில் அடிப்பதன் மூலம் குணப்படுத்தலாம் என வேளாண்மைத் துறை அலுவலர்கள் விவசாயிகளுக்குப் பயிற்சியளித்தனர்.
இதையும் படிங்க: மழையால் நாசமான நெற்பயிர்கள் - வேதனையில் புதுக்கோட்டை விவசாயிகள்