விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள கோவிந்த நல்லூர் கிராமத்தில் அர்ஜுனா நதி செல்கிறது. இந்த ஆற்றின் சுற்றுவட்டாரப் பகுதிகளிலுள்ள பத்திற்கும் மேற்பட்ட ஊர்கள் மழை காலங்களில் இந்த ஆற்றை வாழ்வாதாரமாக பயன்படுத்துகின்றனர். இரு ஆண்டுகளாக மழையளவு குறைந்ததால் இங்கு நீர்வரத்து குறைந்து காணப்படுகிறது. தற்போது கோடை காலம் என்பதால் ஆற்றில் தண்ணீர் இல்லாத சூழல் நிலவுகிறது.
அதன் காரணமாக ஆறு வறண்டு வறட்சிப் பகுதியாகக் காணப்படுகிறது. இதனால் சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த சில சமூகவிரோத கும்பல்களால் தொடர்ந்து ஆற்றுமணல் திருடப்பட்டுவருகிறது. இதற்கு அந்தப் பகுதி மக்கள் சிலர் உறுதுணையாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
மேலும், அரசு அலுவலர்கள் ஆய்வு செய்யும் நேரங்களில் பொதுமக்கள் சிலரால் மணல் திருடும் கும்பலுக்கு ததவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் தப்பித்துச் சென்று விடுகின்றனர். இருப்பினும் அவ்வப்போது அரசு அலுவலர்கள் ஆற்றுமணலை பறிமுதல் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், அப்பகுதியில் ஜேசிபி இயந்திரம் மூலம் மணல் திருட்டு அதிகமாக நடைபெறுவதாகக் கூறப்படுகிறது. குறிப்பிட்ட அளவைவிட அதிக அளவில் மணல் அள்ளப்பட்டு வருவதால் அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் மிகவும் மோசமான நிலைக்குச் சென்றுள்ளது. அரசு இதை தடுத்து நிறுத்த வேண்டும் என்பதோடு மட்டுமல்லாமல் பொது மக்களும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.