மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அமைந்திருக்கும் ஸ்ரீவில்லிபுத்தூரில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்துவருகிறது. இதையொட்டி மலை அடிவாரத்திலுள்ள கண்மாய்கள் நிரம்பி மறுகால் பாய்ந்து வருகிறது. மேலும் வனத்தில் பெய்யும் மழையால் பேச்சியம்மன் கோயில் ஓடை, பேயனாற்று ஓடை உள்ளிட்ட ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இதையடுத்து ஓடையில் குளிப்பதற்கு ஆர்வம் காட்டி ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியிலிருந்து ஏராளமான பொதுமக்கள் வனப்பகுதிக்குள் சென்றுவருகின்றனர். இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மம்சாபுரம் பகுதியில் உள்ள அத்திதுண்டு பேமலையான் கோவில் அருகே கோபி, பால்பாண்டி, முத்துக்கருப்பன் ஆகியோர் ஓடையில் குளிக்கச் சென்றனர். தொடர்ந்து குளித்து கொண்டு இருந்தபோது மூவரும் நீரின் வேகத்தை தாங்க முடியாமல், ஆற்றின் ஓடையில் இழுத்துச் செல்லப்பட்டனர்.
உடனே அருகில் இருந்தவர்கள் மூவரையும் காப்பாற்ற முயன்றனர். இருப்பினும் அது தோல்வியை தழுவி மூவரும் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். பிறகு சம்பவம் குறித்து தகவலறிந்து சென்ற தீயணைப்பு துறையினர், மூவரையும் தீவிரமாக தேடி வருகின்றனர். ஒரேபகுதியைச் சேர்ந்த மூன்று பேர் காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: சோலார் நிறுவனம் அமைத்துத் தருவதாகக் கூறி ரூ. 1.50 கோடியை ஏமாற்றியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்