விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள பெரியார் காலனியில் திருமணமாகி ஒரு மாதமான மோகினி (24) என்ற இளம்பெண் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் வீட்டில் சடலமாகக் கிடந்தார்.
இந்தக் கொலை சம்பவம் குறித்து சிவகாசி கிழக்கு காவல் நிலைய காவல்துறையினர் தலைமையில் மூன்று தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டதில், மோகினியின் எதிர் வீட்டில் வசித்துவந்த பரமேஸ்வரி காவல்துறையிடம் சம்பவம் குறித்து நடித்துக் காட்டினார்.
இது காவலர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து, பரமேஸ்வரியின் மகன் கோடீஸ்வரன்(20) மற்றும் அவரது நண்பர் சேகர் (21) ஆகியோரை நேற்றிரவு (ஆக.10) காவல்துறையினர் கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், கோடீஸ்வரன் மற்றும் அவரது நண்பரான சேகர் ஆகிய இருவரும் சிவகாசி அருகே உள்ள பட்டாசு ஆலையில் பணிபுரிந்து வருகின்றனர். கடந்த சில மாதங்களாக சரியாக வேலை இல்லாததால் வருமானம் ஏதும் இல்லாமல் சுற்றித் திரிந்து உள்ளனர்.
அப்போது கோடீஸ்வரன் தனது எதிர் வீட்டில் ஒரு பெண் புதிதாக திருமணம் முடிந்து நிறைய நகையுடன் வந்துள்ளது தெரியவந்துள்ளது. இதையடுத்து, அங்கு சென்று கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ளனர்.
இருவரும் சம்பவம் நடந்த அன்று மதிய வேளையில், மோகினியின் வீட்டிற்கு சென்று அவரின் கழுத்தை நெரித்து நகையை பறித்து முயன்றுள்ளனர். ஆனால் மோகினி கழுத்தில் அணிந்திருந்த நகையை கொடுக்க மறுத்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் மோகினியை வெட்டியுள்ளனர்.
அதன்பின்னர், அவர் அணிந்திருந்த ஒரு பவுன் மதிப்பிலான அணிகலனை பறித்துக் கொண்டு தனது வீட்டில் மறைத்து வைத்து வழக்கம்போல் பணிகளை மேற்கொண்டனர் எனத் தெரிவித்தனர்.
இதையடுத்து இவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்துள்ள காவலர்கள், அவர்களிடம் மேற்கொண்டு விசாரணை நடத்திவருகின்றனர்.