தமிழ்நாடு முழுவதும் கரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், மாவட்ட எல்லைகளைத் தீவிரமாகக் கண்காணிக்க சோதனைச் சாவடிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை கோயம்பேடு சந்தையில் பரவிய கரோனா வைரஸ் பாதிப்பால், அங்கிருந்து பிற மாவட்டங்களுக்கு அதிக அளவில் மக்கள் சென்றதாலும், வேறு மாநிலங்களிலிருந்து அவரவர் சொந்த ஊர்களுக்கு மக்கள் திரும்புவதாலும் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
விருதுநகர் மாவட்டத்தில் இதுவரை 51 பேருக்கு கரோனோ பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள சூழலில், தற்போது மகாராஷ்டிராவிலிருந்து ஆமத்தூர், பந்தல்குடி ஆகிய பகுதிகளுக்கு வந்த மூவருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 54ஆக அதிகரித்துள்ளது. இதனையடுத்து அவர்கள் வசித்துவந்த பகுதி முழுவதும் சுகாதாரத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.