விருதுநகர்: விருதுநகரில் பாஜக சார்பில் போட்டியிடும் பாண்டுரங்கனை ஆதரித்து இன்று(மார்ச் 31) நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கலந்துகொண்டார்.
அப்போது பேசிய அவர், "தமிழ்ப் பாரம்பரியம், கலாசாரத்தை உலகம் முழுவதும் அறியுமாறு உயர்த்திப் பேசியவர் பிரதமர் மோடி, இந்தியாவில் சிறப்பான மாநிலம் தமிழ்நாடு.
காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் பல கிராமங்களில் மின்சாரம் கிடைக்கவில்லை. ஆனால், கடந்த 6 ஆண்டுகளில் பாஜக பல சாதனைகளைச் செய்துள்ளது. ரயில்வே போக்குவரத்து, விமான சேவை, எய்ம்ஸ் மருத்துவமனை எனப் பல அடிப்படைத் தேவைகள் தமிழ்நாட்டிற்கு தேசிய ஜனநாயக கூட்டணி மூலம் கிடைத்துள்ளது.
கரோனா காலத்தில் மத்திய அரசு இலவச கேஸ், அரிசி, பெண்களுக்கு மாதம் ரூ. 500 வழங்கி திறமையாகக் கையாண்டது.
திமுக - காங்கிரஸ் ஆட்சியில் ஊழல், ரவுடித்தனம், பெண்களை இழிவுபடுத்துவதுதான் நடந்தது.
இதனால், அக்கூட்டணி ஆட்சிக்கு வரக்கூடாது. பெண்களை இழிவுபடுத்தும் திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு மக்கள் இந்தத் தேர்தலில் தக்கப் பாடம் புகட்டுவார்கள். விருதுநகரில் சர்வதேச அளவிலான விளையாட்டு மைதானம், பல்கலைக் கழகங்கள், திறன் மேம்பாட்டு பயிற்சி மையம் அமைக்கப்படும். மத்தியில் பாஜகவும், மாநிலத்தில் அதிமுகவும் ஆட்சியில் இருந்தால்தான் தமிழின் பெருமையை உலகறியச் செய்யமுடியும்" என்றார்.
இந்த மாநாட்டில், மத்திய இணை அமைச்சர் வி.கே. சிங், தமிழ்நாடு பாஜக பொதுச் செயலாளர் ராம சீனிவாசன், அதிமுக நிர்வாகிகள் எனப் பலர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: பாஜகவினர் வாகனப்பேரணியால் கோவையில் பதற்றம்