தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டத்திற்குட்பட்ட சோழன் மாளிகை, பட்டீஸ்வரம், பம்பப்படையூர், ஆரியப்படையூர், திருவலஞ்சுழி உள்ளிட்ட பல கிராமங்களில் சுமார் 300க்கும் மேற்பட்ட ஏக்கரில் சம்பா பருவ நெல் நடவு நடைபெற்றுள்ளது. இதற்காக விவசாயிகள் ஒவ்வொருவரும் தங்கள் வீட்டு நகைகைள அடகு வைத்தும், கூட்டுறவு சங்கம் மற்றும் தனியார் நிறுவன கடன்களை பெற்று, இதுவரை ஏக்கர் ஒன்றுக்கு ரூபாய் 25 ஆயிரம் வரை செலவு செய்துள்ளனர்.
இந்நிலையில் நேற்றும், இன்றும் என இரு நாட்களாக தொடர்ந்து கும்பகோணம், திருவிடைமருதூர் மற்றும் பாபநாசம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருவதால், விவசாயிகள் வயலில் நடவு செய்த சம்பா பருவ நெல் முழுவதும் மழை நீரில் மூழ்கி வீனாகி விட்டன. இதனால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். மழை தொடர்ந்து நீடித்தால் மேலும் சேதம் அதிகமாகும் சூழல் ஏற்படும் எனவும் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
மழையினால் பாதிக்கப்பட்ட நெற் பயிர்களை வருவாய்த்துறை, வேளாண்துறை வாயிலாக நேரடி கள ஆய்வு செய்து கணக்கிட்டு, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணத்தை இழப்பீடாக வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.
இதையும் படிங்க : நாகையில் கொட்டித் தீர்த்த மழை.. தமிழகத்தில் அடுத்த ஏழு தினங்களுக்கு மழை வெளுத்து வாங்குமாம் - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
இதுகுறித்து பட்டீஸ்வரம் பகுதியைச் சேர்ந்த விவசாயி குமார் பேசுகையில், "300 ஏக்கருக்கும் மேலே பயிர் செய்த சம்பா சாகுபடி பயிர்கள் பெரிய இழப்பீடுகளை சந்தித்துள்ளது. சரியான வடிகால் வசதி இல்லாத காரணத்தில், பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. மழைநீரில் மூழ்கிய பயிர்களை கணக்கீட்டு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டுமென கோரிக்கை வைக்கிறேன்" என்றார்.
இதுகுறித்து சோழன் மாளிகை பகுதியைச் சேர்ந்த விவசாயி ஜெயக்குமார் கூறுகையில், "இரு நாட்களாக பெய்த மழையினால், 300 ஏக்கருக்கும் மேல் நடவு செய்த பயிர் மழை நீரில் மூழ்கி விட்டது. விவசாயிகளாகிய நாங்கள் ஒரு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் வரை செலவு செய்துள்ளோம். ஆதலால் தமிழக அரசு எங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்" என்றார்.
இந்நிலையில், தமிழகத்தில் அடுத்த ஏழு நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யும் எனவும், ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்