மதுரை: விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியைச் சேர்ந்த ரமேஷ் மற்றும் காரளம் ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினைத் தாக்கல் செய்து இருந்தனர். அந்த மனுவில் ‘விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி தாலுகா, அரசகுளம் கிராமத்தில் எங்களுக்குச் சொந்தமான விவசாய நிலம் உள்ளது. இங்கு விருதுநகர் மாவட்ட நிர்வாகம் தரப்பில் எந்த விதமான அறிவுறுத்தலும் இல்லாமல், சாலை அமைத்து உள்ளனர்.
இது ஏற்கக் கூடியது அல்ல. இதனால் நாங்கள் மிகுந்த இழப்பிற்கு ஆளாகி உள்ளோம். ஆகவே, எங்களது விவசாய நிலத்தில் போடப்பட்ட சாலையை அகற்றவும், மேலும் மூன்று லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் உத்தரவு இட வேண்டும்’ எனக் கூறி இருந்தனர். இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பிரமணியன் மற்றும் விக்டோரியா கௌரி ஆகியோர் முன் நிலையில் நடைபெற்றது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அமர்வு, “பொதுமக்களின் நலனுக்காக சாலை அமைக்கப்பட்டு உள்ளது எனக் கூறுவது நம்பும் வகையில் இல்லை. ஆகவே மாவட்ட ஆட்சியர், விவசாய நிலத்தில் எதற்காக சாலை அமைக்கப்பட்டது? என்பது தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். ஆட்சிப் பணிகள் தனது பொறுப்பில் இருக்கும் அலுவலர் உண்மையை இந்த நீதிமன்றத்தில் கூறுவார் என நீதிமன்றம் நம்புகிறது” எனக் குறிப்பிட்டு வழக்கை ஒத்தி வைத்தனர்.
இதையும் படிங்க: சாதி மறுப்பு திருமணம்.. ஊரை விட்டு ஒதுக்கி வைக்கும் அவலம்.. ஆட்சியரின் நடவடிக்கை என்ன?