விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் முதலியார்பட்டித் தெருவில் உள்ளது பத்திரகாளியம்மன் திருக்கோயில். இங்கு கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக வெறும் கையினால், கரண்டிகள் இல்லாமல் கொதிக்கும் நெய்யில் அப்பம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. சிவராத்திரியை முன்னிட்டு முத்தம்மாள் என்ற மூதாட்டி, கோயில் பூசாரிகள் ஆகியோர் கொதிக்கும் நெய்யை எடுத்து இக்கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு நெற்றியில் பூசி விடுவார்கள்.
முத்தம்மாள் கடந்த 30 ஆண்டுகளாக, இக்கோயிலில் கொதிக்கும் நெய்யில் அப்பம் சுட்டு வருகிறார். இதற்காக கடந்த 40 நாட்கள் விரதம் இருந்து அப்பம் சுடுவது குறிப்பிடத்தக்கது. இக்கோயிலில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் ஏழு கூடைகளில் அப்பம் சுட்டுப் பின்பு, பக்தர்களுக்கு வழங்குவர்.
மஹா சிவராத்தரி அன்று நடைபெறும் பத்திரகாளியம்மன் கோயில் பூஜையில் பக்தர்கள் விரதம் இருந்து கலந்து கொண்டு அப்பத்தை வாங்கி, உண்டால் உடலில் இருக்கின்ற எல்லா நோய்களும் சரியாகிவிடும்; குழந்தை இல்லாத தம்பதியினர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மூதாட்டியிடம் ஆசி பெற்று அப்பம் வாங்கி உண்டால் குழந்தைப் பாக்கியம் கிடைக்கும், வீட்டின் செல்வங்கள் செழிக்கும் என்பது ஐதீகம். மூதாட்டி கொதிக்கும் நெய்யில் கையை விட்டு அப்பம் சுடும் நிகழ்ச்சியைக் காண்பதற்கு ஶ்ரீவில்லிபுத்தூர், சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர்.
இதேபோன்று, விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சிவன், அஞ்சல் நாயகி உடனுறை திருக்கோயில் பஞ்ச ஸ்தலங்களில் ஒன்றான ஆகாய ஸ்தலமாக விளங்குகிறது. இந்த கோயில் சுமார் 1,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவில். இந்த கோயிலில் குழந்தை இல்லாதவர்கள் குழந்தை வரம் கேட்டு, நாகலிங்கம் பூவை அரைத்து சாப்பிட்டு வந்தால் குழந்தை வரம் கிடைக்கும் என ஐதீகம்.
சிவராத்திரி என்பதால் பஞ்ச ஸ்தலங்களுக்கும் சென்று வரக்கூடிய பக்தர்கள் கடைசியாக ஐந்தாவது ஸ்தலமான இக்கோயிலுக்கும் வருகை தருகின்றனர். சிவராத்திரியை மட்டும் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் இங்கு வந்து சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல் இராஜபாளையத்தில் மிகப்பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற மாயூரநாத சுவாமி திருக்கோயிலில் சிவராத்திரியை முன்னிட்டு, ஏராளமான பக்தர்கள் நான்கு கால பூஜைகளையும் கண்டு அதிகாலை வரை விழித்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
இதையும் படிங்க: காசிமேட்டில் திமுக பிரமுகர் கொலை: கொலையாளி பரபரப்பு வாக்குமூலம்