விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே வீரசோழன் கிராமத்தில் 1500க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் தெற்கு தெருவில் அரசு மதுக்கடை செயல்பட்டு வருகின்றது.
இது தொடர்பாக அப்பகுதி மக்கள் கூறுகையில், "கிருஷ்ணன் கோயிலுக்கு 20 மீட்டர் தொலைவில் மதுக்கடை அமைந்துள்ளது. மேலும் இந்த மதுக்கடை பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் சாலையில் அமைந்துள்ளது. அங்கு மது அருந்துபவர்கள் பொது குடிநீர் குழாயில் தண்ணீர் எடுக்க வரும் பெண்களுக்கு இடையூறாக இருக்கின்றனர். பள்ளி, கல்லூரி செல்லும் பெண்கள் மற்றும் குழந்தைகளைத் தொடர்ந்து கேலி செய்துவருகின்றனர்.
அதிகம் குடித்து விட்டு குடியிருப்பு பகுதிக்குள் சென்று, வீட்டு வாசலிலும், தெருக்களிலும் தகாத முறையில் நடந்து கொள்கின்றனர். அரசு விதிகளின்படி மக்களின் குடியிருப்பு பகுதி மற்றும் பொது பகுதிகள் அருகே மதுக்கடை இருக்கக்கூடாது. ஆகையால் வீரசோழன் பகுதியில் உள்ள மதுக்கடையை அகற்ற வேண்டும்" என்றனர்.
மேலும் மதுக்கடையை அகற்ற வேண்டும் என்று கூறி வீரசோழன் பகுதி பொதுமக்கள் 100க்கும் மேற்பட்டோர் இணைந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். பின்னர், அந்த மதுக்கடையை அப்பகுதியில் இருந்து அகற்றாவிட்டால் பொதுமக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுக்கப்போவதாக தெரிவித்தனர்.
இதையும் படிங்க: மேல்பட்டி சுடுகாட்டை ஆக்கிரமித்தவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பொதுமக்கள் புகார் மனு!