விருதுநகர் மாவட்டம் சிவகாசி அரசு மருத்துவமனையில் கரோனா நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இந்நிலையில், மருத்துவமனையில் போதுமான இட வசதிகள் இருந்தும் படுக்கை வசதிகள் குறைவாக இருப்பதாகத் தெரிகிறது.
இதனை தங்களுடைய உறவினர்கள் மூலம் சிவகாசியைப் பூர்வீகமாகக் கொண்டு அமெரிக்காவில் வாழ்பவர்கள் அறிந்துள்ளனர். அவர்கள் ஐடி நிறுவனங்கள், பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு அமெரிக்காவில் வாழ்ந்து வருகின்றனர்.
கரோனா அதிகரித்து வரும் இச்சூழலில் உதவும் பொருட்டு அவர்கள், 'கானா' என்கிற தொண்டு நிறுவனத்தின் மூலமாக சிவகாசியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு 20 படுக்கைகளை இலவசமாக வழங்கியுள்ளனர். மேலும், தென் மாவட்டங்களில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் தேவையான வசதிகள் செய்து தருவதற்கு முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் சிவகாசி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் அசோகன் கலந்துகொண்டு தலைமை மருத்துவர் அய்யனாரிடம் படுக்கைகளை ஒப்படைத்தார்.
இதையும் படிங்க:ஆண் குழந்தைக்குத் தாயான பாடகி ஸ்ரேயா கோஷல்!