விருதுநகர் தனியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், பள்ளி மாணாக்கர்கள் மூலம் பெற்றோரிடையே 100 விழுக்காடு வாக்குப்பதிவை வலியுறுத்தி, (SANKALP PATRA) உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கண்ணன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கண்ணன் பேசுகையில், "விருதுநகர் மாவட்டத்தில், 100 விழுக்காடு வாக்குப்பதிவை வலியுறுத்தி, வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. மாணவர்கள் வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களிப்பதின் அவசியம் குறித்து தங்களது பெற்றோர்கள், உற்றார் உறவினர்கள் உள்ளிட்ட அனைவரிடத்திலும் எடுத்துரைத்து மாவட்டத்தில் வாக்குப்பதிவு விழுக்காட்டை உயர்த்துவதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும்" என்றார்.
இதையடுத்து, மாணவர்கள் தங்கள் பெற்றோர், உறவினர்களை தவறாமல் வாக்களிக்க வலியுறுத்துவோம் என்று மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் உறுதி மொழியை எடுத்து உறுதிமொழி பத்திரத்தில் கையொப்பமிட்டனர். மாணவிகளின் பெற்றோர்களும் தவறாமல் வாக்களிப்போம் என்று உறுதிமொழி எடுத்து கையொப்பமிட்டனர்.
இந்நிகழ்ச்சியில், வாக்காளர் விழிப்புணர்வு குறித்த பொம்மலாட்டம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் கூறுகையில், "அடுத்த ஐந்தாண்டுகளில் நம்மை ஆளப்போவது யார் என்பதை உணர்ந்து வாக்களிப்பது நமது கடமையாகும். மாவட்டம் முழுவதும் 50 ஆயிரம் மாணாக்கர்கள் மூலம் தங்களது பெற்றோரிடம் வாக்குப்பதிவு தொடர்பாக உறுதிமொழி நிகழ்ச்சி மேற்கொள்ளப்பட உள்ளது.
வருகின்ற தேர்தலில் ஒவ்வொருவரும் தங்களது வாக்குகளை தவறாமல் பதிவு செய்து வலுவான ஜனநாயம் உருவாக ஒத்துழைப்பு நல்க வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: ஊழியர்கள் வேலைநிறுத்தம்: நான்கு நாள்கள் வங்கிகள் இயங்காது