தீபாவளிக்கு இன்னும் ஒரு மாதமே இருக்கும் சூழ்நிலையில், சிவகாசியில் உள்ள மத்திய அரசின் பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டு அலுவலகத்தில் பட்டாசு தொழிலை ஏற்றுமதி தரத்திற்கு உயர்த்துவது சம்பந்தமான ஆய்வுக் கூட்டம் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தலைமையில் நடைபெற்றது.
இதில், தமிழ்நாடு கேப்வெடி மற்றும் பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்க பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எம்பி மாணிக்கம் தாகூர், "சீனப் பட்டாசுகளுக்கு உலகம் முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், சிவகாசி பட்டாசை உலக அளவில் கொண்டு செல்வது எப்படி என்பது குறித்து அலுவலர்கள், பட்டாசு ஆலை உரிமையாளர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.
சுதந்திர தின உரையில் பிரதமர் அறிவித்தபடி, மாவட்டந்தோறும் ஏற்றுமதி முனையும் அமையும் பட்சத்தில் 80 ஆயிரம் கோடி வர்த்தகம் கொண்டு சீனப் பட்டாசுகளை முறியடித்து, சிவகாசி பட்டாசு முதன்மை பெறும். இதற்காக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயலிடம் இதுகுறித்து ஆலோசனை நடத்தி, குறைந்தது 20 ஆயிரம் கோடி வர்த்தகத்தை சிவகாசிக்கு பெறுவதன் மூலம் இப்பகுதி தன்னிறைவு பெறும்” என்றார்.
இதையும் படிங்க:'சீனப் பொருள்களுக்கு தடை, இந்திய பொருளாதாரத்தை பாதிக்காது'- சுதேஷ் வர்மா