விருதுநகர்: தமிழக அரசின் இலச்சினையாக விளங்கும் கோபுரம் அமைந்துள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோவிலில் அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு முதல் முறையாக வருகை தந்து கோவிலில் ஆய்வு மேற்கொண்டார்.
தெப்பத்திருவிழா நடக்கும் குளத்தில் ஏற்பட்டிருக்கும் பாதிப்பை சரி செய்து விரைவில் அங்கு தெப்பத் திருவிழா நடக்க ஏற்பாடு செய்யப்படும் என செய்தியாளர்களிடம் தெரிவித்தார். தொடர்ந்து முதலமைச்சர் அறிவிப்பின் அடிப்படையில் நாளை குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோவில் வளாகத்தில் 108 விளக்கு பூஜை நடைபெறும் என தெரிவித்தார்.
மேலும் அவர் கூறும்போது, இன்று பாப்பிரெட்டிப்பட்டியில் நடைபெற்ற தேர்த் திருவிழாவின் போது ஏற்பட்ட அசம்பாவித சம்பவத்திற்கு அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும், இனி வரும் காலங்களில் தமிழ்நாட்டில் நடைபெறும் தேர் திருவிழாக்களில் இது போன்ற அசம்பாவிதம் நடக்காத வண்ணம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் கூறினார். தெரிவித்தார்.
அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் இடத்தை ஆக்கிரமித்துள்ள நபர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் உடனே அப்புறப்படுத்தப்பட்டு அந்த இடங்கள் சம்பந்தப்பட்ட கோவிலின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்படும் என்றும் கூறினார்.
மேலும் ஆதீன மடாதிபதிகளுக்கு தமிழக அரசு உரிய மரியாதை அளித்து வருவதாகவும் அதில் ஏதும் குறைபாடு இருந்திருந்தால் இனிவரும் காலங்களில் அது சரி செய்யப்படும் என்றும் தெரிவித்தார். தொடர்ந்து ஸ்ரீவில்லிபுத்தூர் புண்ணிய ஸ்தலத்தில் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்படும் எனவும் சேகர்பாபு குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: ஸ்ரீவில்லிபுத்தூர் துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தை சுற்றிலும் கான்கிரீட் சுற்றுச்சுவர் அமைக்க கோரிய வழக்கு..