விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் உள்ள வட பெருங்கோயில் உடையான் என்று அழைக்கப்படும் வடபத்ரசாயி பெருமாள் கோயில் 108 திவ்யதேசங்களில் ஒன்றாகும்.
இக்கோயிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் பிரம்மோற்சவ உற்சவம் வெகு விமரிசையாக நடைபெறும். அதுபோல் நிகழ்வாண்டில் புரட்டாசி பிரம்மோற்சவ உற்சவம் இன்று (செப். 19) கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கொடியேற்றத்தை முன்னிட்டு அதிகாலை ஸ்ரீ பெரியபெருமாள், ஸ்ரீதேவி, பூமிதேவி சுவாமிகளுக்குச் சிறப்புத் திருமஞ்சனம் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. வேத கோஷங்கள் முழங்க, கொடிமரத்திற்குச் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
தொடர்ந்து கருடாழ்வார் உருவம் பொறித்த கொடியினை வாசுதேவ பட்டர் ஏற்றினார். இன்றிலிருந்து 10 நாள் பிரமோற்சவ விழா நடைபெறுகிறது. தினமும் காலை ஸ்ரீபெரிய பெருமாள் ஸ்ரீதேவி பூமிதேவி சுவாமிகளுக்குச் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
கரோனா தொற்று காரணமாகத் திருவீதி உலா நடைபெறாது என்று கோயில் நிர்வாகத்தின் சார்பாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம்செய்தனர்.