விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே செண்பகத்தோப்பு பகுதியில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள ராக்காச்சி அம்மன், பேச்சியம்மன் கோயில் பகுதி நீரோடைகளிலும், வழுக்குப் பாறை அருவிகளிலும் தொடர் மழையின் காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அதிகமான சுற்றுலா பயணிகள் விடுமுறை நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களில் அருவிக்கு வந்து குளிக்கின்றனர்.
இதையறிந்த சமூக விரோதிகள் சிலர் சுற்றுலாப் பயணிகளுக்கும் மற்றும் வனவிலங்குகளுக்கும் ஆபத்து ஏற்படுத்தும் விதமாக தடைசெய்யப்பட்ட பொருள்களை கொண்டு செல்வது, மது அருந்துவது மது அருந்திய பாட்டில்களை உடைத்து வன விலங்குகளுக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் விதமாக வனப்பகுதியில் போடுவது உள்ளிட்ட செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஒருவித அச்சத்துடனேயே வருகின்றனர். இந்நிலையில் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக வனத்துறையினரும், மம்சாபுரம் காவல் துறையினரும் வனப் பகுதிக்குள் தடை செய்யப்பட்ட பொருட்களை கொண்டு செல்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க:மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை: விருதுநகர் அருகே பாலம் உடைந்து வெள்ளப்பெருக்கு!