கரோனா ஊரடங்கு பல்வேறு தொழில்களை மந்தமடையச் செய்தது. அதே நேரத்தில் இந்த கரோனா காலம் மாற்றுத் தொழில்களை உருவாக்கி தொழில்நுட்பங்களை மேம்படுத்தியுள்ளது என்பதில் மாற்றுக்கருத்தில்லை. குறிப்பாக முகக்கவச உற்பத்தி, விற்பனைத் தொழில் தற்போது அமோகமாக நடைபெற்றுவருகிறது.
கரோனாவிலிருந்து மக்கள் பாதுகாப்பாக இருக்க கட்டாயம் முகக்கவசம் அணியவேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. இருப்பினும் பலர் கைக்குட்டைகளைத்தான் பெரும்பாலும் பயன்படுத்திவருகின்றனர். அதற்கு காரணம் முகக்கவசத்தின் விலை, சந்தை தட்டுப்பாடு. பெரும்பாலும் முகக்கவசங்கள் சீனா போன்ற வெளி நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டன.
ஆனால், தற்போது அந்தப் பிரச்னையை சரிசெய்து உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் புதிய தொழிற்சாலை உருவாகியுள்ளது. சிவகாசியைச் சேர்ந்த பாலாஜி என்பவர், ஜமுக்காலம் தயாரித்து ஏற்றுமதி செய்யும் நிறுவனம் நடத்திவருகிறார். கரோனா ஊரடங்கு காரணமாக ஜமுக்காலம் தொழில் முடங்கியதைத் தொடர்ந்து மாற்றுத்தொழிலான என்95 முகக்கவசம், பிபிஇ கிட்களை தயாரிக்கும் பணியில் ஈடுபடத்தொடங்கினார்.
அரசிடம் முறையான அனுமதி பெற்று, மருத்துவர்கள், செவிலியர்கள் பயன்படுத்தும் முழு உடல் பாதுகாப்பு கவசம், முகக்கவசங்களை தன்னுடைய நிறுவனத்தில் தயாரித்து வருகிறார். இதனை தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பிவருகிறார். குறிப்பாக கர்நாடகா, ஒடிஸா, பிகார் ஆகிய மாநில அரசுகளிடம் ஆர்டர் எடுத்து விநியோகித்து வருகிறார்.
இந்த மாற்றுத் தொழில் இவருக்கு மட்டும் பயனலிக்காமல், சிவகாசியைச் சுற்றியுள்ள 300க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கும் வேலைவாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்துள்ளது. வெளிச்சந்தையில் கிடைக்கும் முகக்கவசங்களைவிட தரமானதாகவும் விலை குறைவாகவும் மக்களுக்கு கொடுக்கவேண்டும் என்பதுதான் தங்களுடைய நோக்கம் என்று அந்நிறுவனத்தின் உரிமையாளர் பாலாஜி கூறுகிறார். பட்டாசு, அச்சகத்துக்கு பெருமைவாய்ந்த சிவகாசி தற்போது முகக்கவசத்தையும் குறைந்த விலையில் தயாரித்துவருகிறது.
இதையும் படிங்க: கங்கைகொண்டான் அருகே கிடைத்த மட்பாண்ட ஓடுகள்..அகழ்வாராய்ச்சி செய்ய மக்கள் கோரிக்கை!