விருதுநகர்: சிவகாசி அருகே காளையார்குறிச்சி கிராமத்திலுள்ள பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டதில், 13 அறைகள் வெடித்துத் தரைமட்டமாகின. இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர், 16 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே காளையார்குறிச்சியில் தங்கராஜ் என்பவருக்குச் சொந்தமான தங்கராஜ் பாண்டியன் என்ற பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 16 பேர் காயங்களுடன் சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
காளையார்குறிச்சியில் செயல்பட்டுவரும் தங்கராஜ் பாண்டியன் என்ற பட்டாசு தொழிற்சாலை, சுமார் 40 ஆண்டுகளாகச் செயல்பட்டுவருகிறது. இதில் 200-க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்துவருகின்றனர். இங்கு பேன்சி ரக பட்டாசுகள் தயாரிக்கும் பணி நடைபெற்றுவருகிறது.
இச்சூழலில் நேற்று (பிப். 25) ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்தில் சுமார் 13-க்கும் மேற்பட்ட கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகின. கட்டட இடிபாடுகளுக்கு இடையே 3 பெண்கள் உள்பட 6 பேர் உயிரிழந்த நிலையில் தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். அவர்களின் உடல் சிவகாசி அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டது.
மேலும் 16 பேர் படுகாயங்களுடன் சிகிச்சைக்காக சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.