தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில் சிவகாசி பகுதியில் உள்ள பட்டாசு ஆலைகளில் பட்டா தயாரிப்புப் பணிகள் மும்முரமாக நடைபெற்றுவருகின்றன. அதேபோல் வெளியூர் வியாபாரிகளைக் குறிவைத்து பட்டாசு கடைகளில் அதிக அளவில் பட்டாசுகள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன.
கடைகளில் பட்டாசுகளை இருப்பு வைக்கும்போது அரசு விதித்துள்ள விதிகளைக் கடைப்பிடிக்க வேண்டிய நிர்பந்தம் கடை உரிமையாளர்களுக்கு ஏற்படுவதால் அதிக அளவில் பட்டாசுகளை இருப்பு வைக்க முடியாது.
இதனால் பட்டாசு கடைகள் அருகே உள்ள கட்டடங்களில் சிலர் உரிய அனுமதியின்றி பட்டாசுகளைப் பதுக்கிவைத்து சில்லறை வியாபாரிகளுக்கு விற்பனை செய்துவருகிறார்கள் எனக் குற்றச்சாட்டு எழுந்தது.
அதைத் தொடர்ந்து அரசு அனுமதியின்றி கட்டடங்கள், தகர செட்டில் பட்டாசுகள் பதுக்கி வைக்கப்படுகின்றனவா என்று அலுவலர்கள் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டுவந்த நிலையில், சிவகாசி-சாத்தூர் சாலையில் பாறைபட்டி அருகே விஷ்ணு டிரான்ஸ்போர்ட் குடோனில் பட்டாசுகள் பதுக்கிவைக்கப்பட்டுள்ளதாக வருவாய்த் துறையினருக்குத் ரகசிய தகவல் வந்தது.
சிவகாசி உதவி ஆட்சியர் தினேஷ்குமார், பட்டாசு மற்றும் தீப்பெட்டி தனி வட்டாட்சியர் லோகநாதன் தலைமையில் சம்பந்தப்பட்ட டிரான்ஸ்போர்ட் குடோனில் வருவாய்த் துறையினர் சோதனை நடத்தினர்.
சோதனையில் 1800 பட்டாசு பண்டல்கள் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு சுமார் ஒரு கோடி ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகின்றது.
இது குறித்து அனுப்பன்குளம் கிராம நிர்வாக அலுவலர் சங்கிலிபிரபு கொடுத்த புகாரின்பேரில் டிரான்ஸ்போர்ட் உரிமையாளர் செங்கமலநாச்சியார்புரத்தைச் சேர்ந்த தர்மராஜ் (50), கட்டி உரிமையாளர் மீது சிவகாசி கிழக்கு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.