விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே நரிக்குடி குருவியேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் மலைச்சாமி. இவரது மகன் அறிவரசன்(15) இவர் அருகில் உள்ள இருஞ்சிறை அரசு உயர்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்துவந்தார். இன்று ஆடு மேய்ச்சலுக்காக அவர் காட்டுப்பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது, அப்பகுதியில் உள்ள ரயில் தண்டவாளத்தை அறிவரசன் கடக்க முற்பட்டபோது செங்கோட்டையிலிருந்து எழும்பூர் நோக்கி சென்றுகொண்டிருந்த ’சிலம்பு’ எக்ஸ்பிரஸ் ரயில் எதிர்பாராதவிதமாக அவர் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்நிலையில், நீண்ட நேரமாகியும் அறிவரசன் வீடு திரும்பாததால், அவரது வீட்டினர், அக்கம்பக்கத்தினர் காட்டுப் பகுதியில் தேடியுள்ளனர். அப்போது மாணவன் ரயில் மோதி உயிரிழந்துகிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர் இது குறித்து, நரிக்குடி காவல் நிலையத்திற்கு உறவினர்கள் தகவல் கொடுத்ததன்பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர் ரயில்வே காவல் துறைக்கு தகவல் அளித்தனர். அதனையடுத்து அவரது உடற்கூராய்வுக்காக அனுப்பிவைக்கப்பட்டது. இது குறித்து வழக்குப் பதிவு செய்து விருதுநகர் ரயில்வே காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.