விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில் தமிழ்நாட்டில் மிகவும் பிரசித்திப்பெற்ற ஆன்மிக ஸ்தலங்களில் முதன்மையானதாகும். இந்தக் கோயில் தரை மட்டத்திலிருந்து சுமார் நான்காயிரத்து 500 அடி உயரத்தில் உள்ளது.
இந்தக் கோயிலுக்கு தினமும் லட்சக்கணக்கில் பக்தர்கள் வந்து சென்ற வண்ணம் இருந்தனர். இந்நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த விபத்தின் காரணமாக பக்தர்கள் அமாவாசை, பௌர்ணமி தினங்களில் மட்டும் வந்து சாமி தரிசனம் செய்வதற்கு கட்டுப்பாடுகள் விதித்து மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கோயிலுக்கு வரும் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு முறையான குடிநீர் வசதி, கழிப்பறை வசதிகள் இல்லையெனவும், கோயிலின் மலைப்பகுதியில் அன்னதான கூடம் மூடப்பட்டதால் மற்ற கடைகளில் உணவுப் பொருட்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதாகவும் தொடர்ந்து புகார்கள் தெரிவிக்கப்பட்டன.
இதன் எதிரொலியாக இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பணிந்திர ரெட்டி (ஐஏஎஸ்) சதுரகிரி கோயிலில் ஆய்வு செய்துவருகிறார். ஒருநாள் முழுவதும் இந்த ஆய்வு நடைபெறும் என கூறப்படுகிறது.