விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியில் மணல் திருட்டு நடைபெறுவதாக காவல் துறைக்குத் தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் ராஜபாளையம் அய்யனார் கோவில் சாலை ஆறாவது மைல் டேம் பகுதியில் வடக்கு காவல் நிலைய காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக வந்த இரண்டு டிராக்டரை நிறுத்தி சோதனை செய்ததில் சட்டவிரோதமாக மணல் அள்ளிவந்தது தெரியவந்தது.
தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தியதில் சுந்தரராஜபுரத்தைச் சேர்ந்த பொன்ராஜ் (28), செந்தில்குமார் (22), கார்த்திகேயன் (22), கணபதி சுந்தர நாச்சியார்புரத்தைச் சேர்ந்த தொந்தியப்பன் (30) ஆகியோர் இதில் ஈடுபட்டது தெரியவந்தது.
பின்னர் காவல் துறையினர் நால்வரையும் கைதுசெய்து, அவர்களிடமிருந்து மணலுடன் இரண்டு டிராக்டர்களையும் பறிமுதல்செய்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.