விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் இடையபொட்டல் பகுதியில் உள்ள அரிசி அரவை ஆலையை மகாலிங்கம் என்பவர் வாடகைக்கு எடுத்து கடந்த மூன்று வருடங்களாக நடத்திவருகிறார்.
இந்நிலையில் இந்த அரவை ஆலையில் அரசு ரேஷன் அரிசியை கடத்திவந்து, அந்த அரிசியை குருணையாகவும், மாவாகவும் அரைத்து லாரியில் கடத்தப்படுவதாக வட்டாட்சியருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வட்டாட்சியர் கிருஷ்ணவேணி, வருவாய் துறையினர், ஆலையை சோதனை செய்தனர். அதில் 224 மூட்டை அரசு ரேஷன் அரிசியை அரைத்து லாரியில் கடத்த முயன்றது தெரியவந்தது.
பின்னர், லாரியை பறிமுதல் செய்த அலுவலர்கள் சட்டவிரோதமாக செயல்பட்ட அரவை ஆலைக்கு சீல் வைத்தனர். மேலும் இந்தக் கடத்தல் சம்பவம் குறித்து மகாலிங்கம் என்பவரிடம் வருவாய் துறையினர் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.
சீல் வைக்கப்பட்ட ஆலையிலிருந்து சுமார் 80க்கும் மேற்பட்ட அரசு முத்திரை பதித்த கோணிப்பைகள் கைப்பற்றப்பட்டன.
இதையும் படிங்க: தினக் கூலிகளுக்கு தரமில்லா அரிசி: அறமில்லாத செயல்!