விருதுநகர்: தமிழ்நாட்டிலுள்ள கோயில்களில் நிலையான மாதச் சம்பளமின்றி பணியாற்றிவரும் அர்ச்சகர்கள், பூசாரிகள், பட்டாச்சாரியார்கள், திருக்கோயில் பணியாளர்கள் வாழ்வாதாரத்திற்குத் தவித்துவருகின்றனர்.
நிவாரணப் பொருள்கள் வழங்கல்
அதனைப் போக்கும் பொருட்டு கரோனா நிவாரணத் தொகையாக ரூ.4000, 10 கிலோ அரிசி, 15 வகையான மளிகைப் பொருள்கள் வழங்கும் திட்டம் தமிழ்நாடு அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது.
அதன்படி விருதுநகர் மாவட்டம் சாத்தூர் இருக்கன்குடியில் உள்ள மாரியம்மன் கோயிலில் பணியாற்றிவரும் 81 பயனாளர்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் நடைபெற்றது.
பொருள்கள் வழங்கிய அமைச்சர்
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கலந்துகொண்டு, இருக்கன்குடி கோயிலில் பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு அரசு அறிவித்த நிவாரணத்தொகை ரூ.4000, 10 கிலோ அரிசி, 15 வகையான மளிகைப் பொருள்களை வழங்கினார்கள்.
இதில் சாத்தூர் ஊராட்சி ஒன்றியத் தலைவர் நிர்மலா கடற்கரைராஜ், திருக்கோவில் உதவி ஆணையர், செயல் அலுவலர் கருணாகரன், பரம்பரை அறங்காவலர்கள், இந்து சமய அறநிலையத் துறை, வருவாய்த் துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: இலங்கை அகதி பெண்ணிடம் பாலியல் வன்புணர்வு: இருவர் கைது