விருதுநகர்: சாத்தூர் அருகே அச்சங்குளம் கிராமத்தில் இயங்கி வந்த மாரியம்மாள் பட்டாசு தொழிற்சாலையில், கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 27 பேர் உயிரிழந்தனர், 26 பேர் படுகாயமடைந்தனர்.
இதனையடுத்து உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ஒன்றிய, மாநில அரசுகள் நிவாரணம் அறிவித்தன. மேலும், ஆலை நிர்வாகம் சார்பில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ. 1 லட்சமும் நிவாரண தொகைக்கான காசோலை வழங்கப்பட்டன.
நிவாரணம் பெற்றுத் தரக்கோரி காத்திருப்பு போராட்டம்
இந்நிலையில் ஆலை நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்ட காசோலை, வங்கிக் கணக்கில் பணம் இல்லாமல் திரும்பி வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பலமுறை புகாரளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால் ஆலை நிர்வாகம் சார்பில் வழங்கப்பட வேண்டிய நிவாரணத் தொகையை, விரைவில் பெற்றுத் தர கோரி உயிரிழந்தவர்களின் உறவினர்கள் இன்று (ஜூலை 26) சாத்தூர் தாசில்தார் வெங்கடேஷிடம் மனு அளித்தனர்.
மேலும் தாசில்தாரிடம் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் திருப்தியடையாத உறவினர்கள் 25க்கும் மேற்பட்டோர், தாலுகா அலுவலகத்தின் உள்ளே காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் காவல் துறையினர் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து, காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: குழந்தையின் கட்டைவிரல் வெட்டப்பட்ட விவகாரம் - நிவாரணம் வழங்க உத்தரவு