விருதுநகர் தேசபந்து மைதானத்தில், எம்ஜிஆரின் 103ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பொதுக்கூட்டம் மற்றும் 300 தாய்மார்களுக்கு நலத்திட்டம் வழங்கும் விழா நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட தமிழ்நாடு பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசுகையில், ‘தமிழ்நாடு முதலமைச்சரும் துணை முதலமைச்சரும் ஆட்சியை சிறப்போடு நடத்திவருகின்றனர். இது ஒரு ஆன்மீக ஆட்சி, ஏழை மக்களை பாதுகாக்கும் ஆட்சி, இதுதான் இந்தியாவின் ஆட்சி, புரட்சித்தலைவி அம்மாவின் ஆட்சி’ என புகழாரம் சூட்டினார்.
மேலும், தமிழ்நாடு முதலமைச்சரும் துணை முதலமைச்சரும் தமிழ்நாட்டை வளம் காணும் தமிழ்நாடாக, பிற மாநிலங்கள் பொறாமைப்படும் வளர்ச்சி பெறும் அளவிற்கு ஆட்சி செய்து வருவதாக கூறியுள்ளார்.இதன் காரணமாக தமிழ்நாடு மத்திய அரசின் பல விருதுகளை குவித்துக்கொண்டு வருகிறது.
எம்ஜிஆர் அருகில் இருந்த காரணத்தினால் தான் அண்ணா நாட்டிற்கு அடையாளம் காணப்பட்டார். எம்ஜிஆரை பார்த்து தான் அண்ணாவிற்கு தமிழ்நாட்டு மக்கள் ஓட்டு போட்டனர்.
எம்ஜிஆர் இருந்ததால்தான் கலைஞர் முதலமைச்சரானார். எம்ஜிஆர் முதலமைச்சரான பிறகு கலைஞரால் முதலமைச்சராக முடியவில்லை. அதிமுக வெற்றி பெற்றால்தான் நாடு வளர்ச்சியடையும், ஆன்மீகம் பெருகும், குற்றங்கள் குறையும் எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பெரியார் எதிர்ப்பு அரசியலில் ரஜினிகாந்த் ஈடுபடுகிறாரா? - பதில் அளிக்கிறார் அமைச்சர் ஜெயக்குமார்...