வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சட்டப்பேரவைத் தொகுதியில் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி போட்டியிடுகிறார். இன்று தனது தொண்டர்களுடன் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு ஊர்வலமாக வந்த அவர், வேட்புமனுவைத் தாக்கல்செய்தார். பின்னர் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது திறந்த வாகனத்தில் நின்று பேசிய அவர், "திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்த தேர்தல் அறிக்கை, 'சீனி சக்கர சித்தப்பா ஏட்டில் எழுதி நக்கப்பா' என்ற கதையில் உள்ளது. 2006இல் கருணாநிதி இரண்டு ஏக்கர் நிலம் தருவேன் எனத் தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தார்.
ஆனால் இதுவரை யாருக்கும் ஒரு சென்ட் இடம்கூட கொடுக்கவில்லை. ஏமாற்றிப் பிழைக்கும் கூட்டம் திமுக கூட்டம். உழைத்துப் பிழைக்கும் கூட்டம் அதிமுக கூட்டம்.
ஜெயலலிதாவின் ஆட்சி மூன்றாவது முறையாக எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைய வெற்றிபெறச் செய்வீர். 10 ஆண்டு அமைச்சராக இருந்த எனது அனுபவத்தை வைத்து இந்தத் தொகுதியில் பல்வேறு திட்டங்களைக் கொண்டுவருவேன். இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து, என்னை 50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்யுங்கள்" என்று தெரிவித்தார்.