விருதுநகர் மாவட்டத்தில் அதிக மக்கள்தொகையையும், அதிக வார்டுகளையும் கொண்ட நகராட்சி ராஜபாளையம் நகராட்சியாகும். இந்நகராட்சியிலுள்ள 26 வார்டுகளில் தூய்மைப் பணிகளை மேற்கொள்ள ஏவிஎம் என்ற தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 16 வார்டுகளை மட்டும் நகராட்சி நிர்வாகம் பராமரித்துவருகிறது.
இந்நிலையில், ராஜபாளையம் நகராட்சியில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. இருப்பினும், நகராட்சி நிர்வாகம் சார்பில் எந்த ஒரு இடத்திலும் கிருமிநாசினி மருந்து தெளித்தல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளோ, தடுப்புப் பணிகளோ மேற்கொள்ளப்படவில்லை என்பதே சமூகச் செயற்பாட்டாளர்களின் ஆதங்கமாக உள்ளது.
தனியார் வசம் ஒப்படைத்த 26 வார்டுகளில் சுகாதாரமின்றி மிகப்பெரிய அளவில் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் வேதனையுடன் கூறுகின்றனர். தனியார் வசம் ஒப்படைத்த வார்டுகளில்தான் இதுவரை அதிக கரோனா தொற்று எண்ணிக்கை பதிவாகியுள்ளது.
நகராட்சியில் நகர்நல அலுவலர் இல்லாத காரணத்தால், பெயரளவில் மட்டுமே தடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதேநிலை நீடித்தால் சென்னையைப் போல் கரோனா தொற்று பரவல் ராஜபாளையத்திலும் ஏற்படும் என்று சமூகச் செயற்பாட்டாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இதனைத் தடுக்க அரசு ராஜபாளையம் பகுதிக்கு கரோனா தடுப்புச் சிறப்புக் குழு அமைத்து, இங்கு பல ஆண்டுகளாக பணியாற்றிவரும் நகராட்சி ஊழியர்களைப் பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்றும், உடனடியாக நகர்நல அலுவலரை நியமிக்க வேண்டும் எனவும் நகராட்சி மக்களின் வேண்டுகோளாக இருக்கிறது.
இதையும் படிங்க: ஆடி அமாவாசை: கரோனா ஊரடங்கால் வெறிச்சோடிய ராமேஸ்வரம் கடற்கரை