விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்குத் தொடர்ச்சிமலைப் பகுதியில் தரை மட்டத்தில் இருந்து சுமார் 4500 அடி உயரத்தில் அமைந்துள்ளது பிரசித்திப் பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில். இந்தக் கோயிலில் சித்தர்கள் வாழ்ந்து வழிபட்டு வருவதாகக் கூறப்படுவதால் இது சித்தர்களின் சொர்க்க பூமி என அழைக்கப்படுகிறது.
2015 ஆம் ஆண்டு சதுரகிரியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி எட்டு பக்தர்கள் உயிரிழந்தையடுத்து பக்தர்களின் பாதுகாப்புக் கருதி மாதந்தோறும் அமாவாசை, பௌர்ணமி உள்ளிட்ட எட்டு நாள்களில் மட்டும் பக்தர்கள் கோயிலுக்குச் செல்ல வனத்துறை அனுமதி அளித்துள்ளது.
இந்நிலையில் கரோனா பரவலைக் கருத்தில்கொண்டு பல்வேறு கட்டுப்பாட்டுடன் கோயில் நிர்வாகம் பக்தர்களுக்கு அனுமதி வழங்கிவருகிறது. பிரதோஷம், அமாவாசையை முன்னிட்டு கடந்த 14ஆம் தேதி முதல் நாளை (அக். 17) வரை மொத்தம் நான்கு நாள்கள் மட்டுமே பக்தர்கள் கோயிலுக்குச் செல்ல அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று புரட்டாசி அமாவாசை என்பதால் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்துவருகின்றனர். எதிர்பாராத அளவிற்கு கூட்டம் அதிகரித்துக் கொண்டேவருவதால் கோயில் நிர்வாகம், வனத் துறையினர் பக்தர்களைக் கட்டுப்படுத்தத் திணறிவருகின்றனர்.
அதுமட்டுமின்றி வாகனங்கள், பேருந்துகளில் வரும் பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி உள்ளதால் நீண்ட வரிசையில் நிற்கின்றன. இதனால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.