தமிழ்நாடு சட்டபேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று (ஏப்.06) நடைபெற்று முடிந்தது. மொத்தம் 71.79 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள வாக்குச்சாவடி எண் 164இல் நேற்று வாக்குப்பதிவு காலையிலிருந்து மாலை வரை எந்த ஒரு பிரச்னையும் இல்லாமல் சுமூகமாக நடைபெற்றது. இதையடுத்து வாக்குப்பதிவு முடிந்து சீல் வைக்கும் பணியில் ஈடுபட்ட அலுவலரிடம் ராஜபாளையத்துக்கு உரிய முதல் எழுத்தான 'R' என்ற எழுத்தை வைக்கக்கூடாது என திமுகவினர் தெரிவித்தனர்.
இதனால் அதிமுகவினருக்கும் திமுகவினருக்கும் இடையே சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் தேர்தல் அலுவலர்கள் நேரில் வந்து சமரசம் செய்தனர். தொடர்ந்து 'R' என்ற எழுத்தை தவிர்த்துவிட்டு அரசு முத்திரை வைத்து சீல் வைத்தனர்.
இதுகுறித்து அதிமுக தரப்பினர் கூறுகையில், "R என்பது ராஜபாளையத்தின் முதல் எழுத்து. இதை வைக்கக் கூடாது என்று திமுகவினர் வாக்குவாதம் செய்வது எந்த விதத்தில் நியாயமானது? R என்றால் ராஜபாளையத்தை தான் குறிக்கும். ஆனால் திமுகவினர் R என்றால் ராஜேந்திரபாலாஜி எனக்கூறி இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது" என்றனர்.