விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ஆவாரம்பட்டி, அம்பலபுளி பஜார் பகுதிகளில் சுமார் 2 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட விசைத்தறி தொழிலாளர்கள் சேலை உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் நேரடியாக 2 ஆயிரம் நபர்களும் மறைமுகமாக 2 ஆயிரம் நபர்களும் என 4 ஆயிரம் தொழிலாளர்கள் இந்தத் தொழிலில் ஈடுபட்டுவருகின்றனர்.
வேலை நிறுத்தப் போராட்டம்
கடந்த மாதம் நூல் விலை 900 ரூபாய் விற்ற நிலையில், தற்போது 1300 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதனால் விசைத்தறி தொழிலாளர்களால் தொடர்ந்து தொழிலில் ஈடுபட முடியவில்லை. இதையடுத்து சிறு விசைத்தறி துணி உற்பத்தியாளர் சங்கம் மற்றும் இந்தச் சங்கத்தில் சாராத உறுப்பினர்கள் என இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறி தொழிலாளர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
நூல் விலை உயர்வு ஒரு பக்கம் என்றால் சாய பட்டறைகளை நூலுக்கு சாயம் செய்வதிலும் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. இதனால் தொடர்ந்து தங்களால் வேலை செய்ய இயலவில்லை எனக் கூறி விசைத்தறி தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இது தொடர்பாக விசைத்தறி உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் பாண்டியராஜன்,’மத்திய, மாநில அரசுகள் உடனடியாக இதில் தலையிட்டு தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நூல்களை சில இடங்களில் பதுக்கியுள்ளனர். பஞ்சு ஏற்றுமதி செய்வதால் பஞ்சு தட்டுப்பாடு, நூல் தட்டுப்பாடு ஏற்படுகிறது. பஞ்சு பதுக்குவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விசைத்தறி தொழிலாளர்கள் நலன் காக்க வேண்டும்’ என்றார்.
இதையும் படிங்க:இயற்கை விவசாயத்தை இளைஞர்கள் முன்னெடுக்க வேண்டும்- சத்குரு