விருதுநகர்: நகராட்சியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பொன். ராதாகிருஷ்ணன் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது, காமராஜர் தலைவராக இருந்த விருதுநகர் நகராட்சியில் ஊழல் இல்லாத நல்லவர்தான் தலைவராக வர வேண்டும் என்றும், நாங்கள் லஞ்சம், ஊழல் இல்லாத நிர்வாகத்தை கொடுப்போம் என்றும் அதற்கு பாஜக வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
பின்னர், செய்தியாளரிடம் பேசிய பொன். ராதாகிருஷ்ணன், பாஜகவிலிருந்து விலகிய கு.க. செல்வத்தின் விமர்சனத்தை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்றார். மேலும், தமிழ்நாட்டில் பாஜக நல்ல வளர்ச்சியைப் பெற்றுவருகிறது எனக் கூறினார். இந்தத் தேர்தலில் திமுக எப்போதும் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய சரிவை சந்திக்கும் என்றார்.
திமுக அரசு தொடர்ந்து மக்கள் விரோதப் போக்கைத் தந்துகொண்டிருக்கிறது. பெண்களுக்கு மாதம் ரூ.1000 கொடுப்பேன் என்று ஏமாற்றினார்கள். குடும்பத் தலைவராக பெண்கள் இருந்தால்தான் அத்தொகை வழங்கப்படும் என்கிறார்கள். இப்படி குடும்பத்தைப் பிரிக்கிறது திமுக எனக் குற்றஞ்சாட்டினார்.
திமுக தொடர்ந்து பொய்யைச் சொல்லி மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு விரைவில் முடிவு காலம் வந்து கொண்டிருக்கிறது எனத் தெரிவித்தார்.
மேலும், பேசிய பொன். ராதாகிருஷ்ணன், அதிமுக - பாஜக கூட்டணி முறிந்துபோன கூட்டணி அல்ல. தேசிய ஜனநாயகக் கூட்டணி தொடர்கிறது. ஆனால் இந்தத் தேர்தலில் அதிமுகவினர் பலத்தைப் பெருக்க வேண்டும் என்று அவர்கள் நினைக்கிறார்கள், எங்கள் பலத்தை பெருக்க வேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம்.
இருவரது வளமும் பெருகும்பொழுது எங்கள் கூட்டணி நிச்சயமாக மேலும் பலம் பொருந்தியதாக அமையும் என்று கூறினார்.
இதையும் படிங்க: ராஜேந்திர பாலாஜியிடம் 10 மணி நேரம் தொடர் விசாரணை: 100 கேள்விகளால் துளைத்த காவல்துறை...