விருதுநகர்: அருப்புக்கோட்டை நகராட்சியில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை (பிப்ரவரி 22) எண்ணப்படுகின்றன.
இந்நிலையில், இந்தத் தேர்தலில் வாக்காளர்களுக்கு முகக் கவசம், கையுறை, கிருமிநாசினி வழங்குவதற்காக நகராட்சியில் பணிபுரியும் தற்காலிகத் தூய்மைப் பணியாளர்கள், கொசுப்புழு ஒழிப்புப் பணியாளர்கள் 174 பேர் ஈடுபடுத்தப்பட்டனர்.
இந்நிலையில் இந்த 174 பேருக்கும் அஞ்சல் வாக்குகள் வழங்கி அதை திமுகவினரால் ஒட்டிக்கொடுக்கப்பட்டு நகராட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள அஞ்சல் வாக்குப் பெட்டியில் போடப்படுவதாக வந்த புகாரை அடுத்து அதிமுகவினர், நாம் தமிழர் கட்சியினர், பாஜகவினர் நகராட்சி அலுவலகம் முன்பு திரண்டனர்.
தற்காலிகப் பணியாளர்களுக்கு அஞ்சல் ஓட்டு கிடையாது எனவும் அஞ்சல் வாக்குகள் எண்ணக் கூடாது எனவும் நகராட்சி அலுவலகத்தை அவர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அப்போது அங்கு வந்த நகர் காவல் துறையினர் அதிமுகவினரை விரட்டியதால் காவல் துறையினருக்கும் அதிமுகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும் நகராட்சி அலுவலகத்தின் வாயிலையும் காவல் துறையினர் இழுத்து மூடினர். அப்போது அதிமுகவினர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, அதிமுக கிழக்கு மாவட்டத் தகவல் தொழில்நுட்பப் பிரிவுச் செயலாளர் கருப்பசாமியைக் காவல் நிலையம் இழுத்துச் செல்ல முயன்றபோது அதிமுக நகரச் செயலாளர் சக்திவேல் கீழே விழுந்து அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.