விருதுநகர் - மதுரை சாலையில் மாவட்ட சிறைச்சாலையில் 80 கைதிகள் உள்ளனர். அங்கு பாதுகாப்புக்காக 20க்கும் மேற்பட்ட காவலர்கள் உள்ளனர். சிறைச்சாலையில் உள்ள கைதிகளை பார்க்க வரும் உறவினர்களிடம் சிறைக்காவலர்கள் லஞ்சம் வாங்குவதும், உணவு மற்றும் பொருட்களை கைதிகளுக்கு காவலர்கள் சரியாக கொடுப்பதில்லை என்றும் நீண்ட காலமாக குற்றச்சாட்டு இருந்து வருகிறது.
இந்நிலையில் சிறைச்சாலை வளாகத்தில் நடந்த ஒரு சம்பவத்தின் வீடியோ, வாட்ஸ்அப்பில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் சிறைச்சாலையில் பணிபுரியும் காவலர் ஒருவர், குடிபோதையில் பணியில் இருக்கும் காவலர்களை ஆபாசமான முறையில் பேசி சண்டையிடுவது பதிவாகியுள்ளது. விருதுநகர் மாவட்ட சிறைக்குள் காவலர்களுக்குள் தகராறு ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் கடந்த மாதம் நடந்தது என்றும், சண்டையில் ஈடுபட்ட காவலருக்கு சென்னை புழல் சிறைக்கு மாறுதல் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது என்று காவல்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.