சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலானது தரைமட்டத்தில் இருந்து சுமார் 4,500 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்குச் செல்லும் பிரதான நுழைவுவாயில் விருதுநகர் மாவட்டத்திலும், கோயில் அமைந்துள்ள மலைப்பகுதி மதுரை மாவட்டத்திலும் அமைந்துள்ளதால் அடிக்கடி பக்தர்களை அனுமதிப்பதில் இங்கு பிரச்னைகள் ஏற்படுவது வழக்கம்.
இந்நிலையில் கடந்த ஆறு நாள்களாக நாடு முழுவதும் நவராத்திரித் திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதில், முக்கிய விழாவான விஜயதசமி வரும் திங்கள் (அக்.26) அன்று நடைபெற உள்ள நிலையில், சதுரகிரி சுந்தர மகாலிங்கம் மலையில் உள்ள ஆனந்தவல்லி அம்மனுக்கு நவராத்திரி சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
இதில் பங்கேற்க நாளொன்றுக்கு 350 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று மதுரை, விருதுநகர் மாவட்ட நிர்வாகங்கள் அறிவித்திருந்த நிலையில், இன்று (அக்.24) கோயிலுக்கு வந்த பொது மக்களை காவல் துறையினரும், வனத்துறையினரும் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
தொடர்ந்து, அப்பகுதியில் தர்ணாவில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் கடுமையாக நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. அதில் ஒரு ஆய்வாளர், பக்தர்கள் தங்கள் சாதியைக் கூறிய பின்பே மலையேற அனுமதிக்கப்படுவர் என்று கூறியதை அடுத்து, பொதுமக்களுக்கும் காவல் துறையினருக்குமிடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.
தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்த காவல் துறை முயற்சித்த நிலையில், இரு தரப்பினருக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டுள்ளது. இதனால் தாணிப்பாறை பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், சாதி பெயரைக் கேட்ட ஆய்வாளர் சிவக்குமார், தகாத வார்த்தைகளில் பேசிய டிஎஸ்பி இமானுவேல் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை அப்பகுதி மக்கள் முன்வைத்துள்ளனர்.
இதையும் படிங்க...'திருமாவளவன் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டிருப்பது ஜனநாயக விரோதம்!'