விருதுநகர் மாவட்டம் வச்சக்காரபட்டி அருகே தடங்கம் கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் கடந்த இரண்டு மாதமாக குடிநீர் வழங்கப்படாததால் மக்கள் தண்ணீரின்றி மிகுந்த தட்டுப்பாட்டில் உள்ளனர். மேலும் நாளொன்றுக்கு 100 ரூபாய் வரை குடிநீருக்கு செலவு செய்யும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், கரோனா தொற்றால் ஏற்பட்ட பேரிழப்பால் அவர்களது வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டது. இதனால் அவர்களுக்கிடையே பொருளாதார பற்றாக்குறை நிலவி வரும் சூழலில், குடிநீருக்கு செலவு செய்வது மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தி விடுகிறது. எனவே, இப்பகுதியில் உள்ள பெண்கள், குழந்தைகள், முதியோர் என அனைவரும் குடிநீர் வசதியின்றி மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.
இதையடுத்து, ஊர் பொதுமக்கள் சார்பில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் கண்ணனிடம் கோரிக்கை மனு ஒன்றினை அளித்தனர். அதில், ”தடங்கம் அருகே உள்ள தனியார் சிமெண்ட் ஆலை மற்றும் பூசாரிபட்டி கிராமம் ஆகிய பகுதிகளுக்கு 24 மணி நேரமும் மோட்டார் மூலம் தண்ணீர் வழங்கப்பட்டு வரும் நிலையில், எங்களது ஊருக்கும் முறையான குடிநீர் வழங்க வேண்டும். அடிப்படை வசதிகளான தெருவிளக்கு, முறையாக குப்பைகளை அகற்றுதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு எங்களது ஊரை சுகாதாரமான முறையில் மாற்ற வேண்டும்” என்று அதில் கூறப்பட்டிருந்தது.
இதையும் படிங்க: மாத ஊதியத்தை வழங்கக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கிய தற்காலிக செவிலியர்!