தமிழ்நாட்டில் கரோனா தொற்று இரண்டாவது அலை தீவிரமாகப் பரவியதையடுத்து கடந்த ஒரு மாத காலமாக தமிழ்நாடு அரசு முழு ஊரடங்கை அறிவித்தது. இந்நிலையில் கரோனா தொற்றுப் பரவல் படிப்படியாக குறைந்து வரும் நிலையில், நேற்று (ஜூன்.07) தமிழ்நாடு அரசு ஊரடங்கில் சில தளர்வுகளை வழங்கியுள்ளது.
பட்டாசு ஆலைகள்
இதன்படி கடைகள் மற்றும் ஒரு சில தொழிற்சாலைகள் 50 விழுக்காடு, தொழிலாளர்களுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி பஞ்சாலை, தீப்பெட்டித் தொழிற்சாலைகள் ஆகியவை 50 விழுக்காடு தொழிலாளர்களுடன் இயங்கி வருகிறது.
கரோனா நிவாரணம்
விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசுத் தொழிற்சாலையை நம்பி மூன்று லட்சம் தொழிலாளர்கள் நேரடியாகவும் ஐந்து லட்சம் தொழிலாளர்கள் மறைமுகமாகவும் ஈடுபட்டுள்ளனர்.
இச்சூழலில், விருதுநகர் மக்களின் மூலதனத் தொழிலாக விளங்கும் பட்டாசு தொழிற்சாலைகளையும் 50 விழுக்காடு தொழிலாளர்களுடன் செயல்பட அனுமதிக்க வேண்டும் எனவும், பட்டாசுத் தொழிலாளர்களுக்கு கரோனா நிவாரணத் தொகையாக 6,000 ரூபாய் வழங்க வேண்டும் எனவும் கோரி விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிஐசிடியு தொழிற்சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.