விருதுநகர் மாவட்டம், பாவாலி கிராமத்தில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்தக் கிராமம் சந்திரகிரி, சொக்கலிங்கபுரம், சீனியாபுரம் உள்ளிட்ட பல கிராம மக்கள் வந்து செல்லும் பகுதியாக விளங்குகிறது. இந்நிலையில், இக்கிராமத்தில் கோயில், பள்ளி வளாகம் உள்ள பகுதியில் புதிதாக மதுபானக் கடை திறப்பதற்கு ஆயத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இப்பகுதியில் மதுபான கடை திறக்கப்பட்டால் பள்ளி மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும், அவர்களின் நல்லொழுக்கம் பாதிக்கப்படும், கோயில்களில் வழிபட வரும் பக்தர்களுக்கு மிகவும் சிரமம் விளைவிக்கும் எனக் கூறி கிராம பொது மக்கள் தங்கள் பகுதியில் மதுபானக் கடை திறக்க வேண்டாம் என்று எதிர்ப்பு தெரிவித்து விருதுநகர் - அழகாபுரி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வட்டாட்சியர் சிவஜோதி, காவல் துறையினர், கிராம மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி மதுபானக் கடை திறக்கும் நடவடிக்கை கைவிடப்படும் என்று உறுதியளித்ததையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதன் காரணமாக சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையும் படிங்க: நேர்முகத்தேர்வு ரத்து: கோவையில் 100-க்கும் மேற்பட்டோர் போராட்டம்