தமிழ்நாட்டில் கரோனா பரவல் காரணமாக கடந்த ஐந்து மாத்திற்கும் மேலாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. கரோனா பரவலை முற்றிலும் தடுத்த பிறகே பள்ளிகள் திறப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அறிவிறுத்தியுள்ள நிலையில் மாற்று வழியாக மாணவர்களுக்கு இணையம், தொலைக்காட்சி வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
தொலைக்காட்சி, இணையம் வழியாக படியுங்கள் என்று எளிதாக சொன்ன அரசிற்கு ஏழை மாணவர்களின் இக்கட்டான சூழ்நிலை புரியாமல் போவது இயல்புதானே. பொருளாதரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு இணைய வழி கல்வி என்பது சிரமமான ஒன்று.
இதை உணர்ந்த படிக்காசுவைத்தான்பட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியர், முதல் வகுப்பில் சேரும் ஏழை மாணவர்களுக்கு மொபைல் போன் வாங்கி கொடுத்துள்ளார். தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி இன்று முதல் விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள படிக்காசுவைத்தான்பட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியிலும் மாணவர் சேர்க்கை தொடங்கியது.
![பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு மொபைல் போன் பரிசளித்த தலைமை ஆசிரியர்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-vnr-05-headmaster-mobile-gift-vis-script-7204885_17082020185011_1708f_1597670411_748.png)
மாணவர் சேர்க்கை தொடங்கிய முதல் நாளிலே பள்ளியில் சேர்ந்த மாணவர்களுக்கு அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் கே.ஜெயக்குமார் ஞானராஜ், மொபைல் போன் வழங்கினார். கட்டணம் வசூலிப்பது, தேர்ச்சி விகிதத்தை காண்பிப்பது என கடமையை மட்டும் செய்தால் போதும் என எண்ணாமல், கிராமப்புற மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, அவர்கள் படிப்பதற்கு மொபைல் போன் வாங்கி கொடுத்த தலைமை ஆசிரியரின் முயற்சி பாராட்டுக்குரியதே.
இதையும் படிங்க; 'லேப்டாப் இல்லை... போன் இல்லை... டிவி இல்லை... இருந்தாலும் படிக்கிறோம்'