விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மல்லி என்ற கிராமத்தில் 'ஸ்ரீ பாபநாஸ் மேட்ச் வொர்க்'' என்ற தீப்பெட்டி தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு அசாம் மாநிலத்தைச் சேர்ந்த சைதூர் அலி என்ற சிறுவன், தனது தந்தை அப்துல் சாதிக் என்பவரை பார்க்க தொழிற்சாலைக்கு வந்ததாகக் கூறப்படுகிறது.
பின்னர் அங்கு கிடந்த தீப்பெட்டி கழிவுப் பொருட்களில் சைதூர் அலி விளையாடி கொண்டிருக்கையில், எதிர்பாராத விதமாக தீப்பெட்டி கழிவுப் பொருட்களில் உராய்வு ஏற்பட்டு தீ பிடித்துள்ளது.
இதனால் அருகிலிருந்த அறையிலும் தீ வேகமாக பரவியதால் தீயணைப்புத் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் அடிப்படையில் ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் சிவகாசி ஊர்களிலிருந்து தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைத்தனர்.
இச்சம்பவத்தில் சிறுவன் சைதூர் அலி படுகாயமடைந்துள்ளதால், தற்போது சிகிச்சைக்காக சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், இந்த தீ விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர்பலி எதுவும் ஏற்படவில்லை.
விபத்து தொடர்பாக, வழக்குப்பதிவு செய்த மல்லி காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.