விருதுநகர் மாவட்டம், மீனாம்பிகை பங்களா பேருந்து நிறுத்தம் அருகில் அண்ணாத்துரை என்பவருக்கு சொந்தமான துணிக்கடையில் நேற்று முன்தினம் (நவ.14) துணிகள் திருடப்பட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
கலைஞர் நகரை சேர்ந்த அண்ணாத்துரை நேற்று முன்தினம் வழக்கம் போல கடையைப் பூட்டிவிட்டு நேற்று (நவ.15) காலை கடையை திறக்க வந்தபோது கடையின் மேற்கூரை பிரிக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். கடையில் நடந்த திருட்டுக் குறித்து காவல் துறையினருக்கு தகவலளித்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் துணிக்கடையில் தடயங்கள் ஏதேனும் இருக்கிறதா? என ஆய்வு மேற்கொண்டனர். கடையில் இருந்த சிசிடிவி காட்சிகளையும் ஆராய்ந்தனர். அந்த சிசிடிவி காட்சியில் வேட்டி அணிந்த ஐம்பது வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் வாயில் கவ்விய டார்ச்சுடன் உள்ளே இறங்குகிறார். கடையில் இருந்த டீ சர்ட் ஒன்றை எடுத்து சிசிடிவி கேமராவை மூட முயற்சிக்கிறார். பலமுறை முயற்சித்தும் துணி கீழே விழுகிறது. பின்னர் அதை தவிர்த்து விட்டு முகத்தை கைக்குட்டையால் மூடி விட்டு திருடத் தொடங்குகிறார்.
துணிக்கடையில் 100-க்கும் மேற்பட்ட பேண்ட்டுகள், சட்டைகளுடன் 10 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணத்தையும் மேற்கூரையைப் பிரித்து அடையாளம் தெரியாத நபர் திருடிச் சென்றுள்ளார். சிசிடிவி காட்சிகளை ஆதாரமாகக்கொண்டு விருதுநகர் மேற்கு காவல் நிலைய காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: பூட்டியிருந்த வீட்டில் கொள்ளை - சிசிடிவி மூலம் காவல் துறையினர் ஆய்வு