விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்து வழக்கில் பேராசிரியர் நிர்மலா தேவி, உதவிப்பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் வெளியே வந்தனர். இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்த நிலையில் வழக்கு விசாரணை ஒன்றுக்கு நிர்மலா தேவி ஆஜராகாத நிலையில் அவரின் பிணை மனுவை ரத்து செய்து பிடியாணை பிறப்பித்தது.
இதனையடுத்து, சிபிசிஐடி காவலர்கள் பேராசிரியர் நிர்மலா தேவியை கைது செய்து சிறையிலடைத்தனர். நிர்மலா தேவி பிணை கோரி அவரது வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி மகாராஜன், நிர்மலா தேவி வழக்கு விசாரணைக்கு தவறாமல் ஆஜராக வேண்டும் என நிபந்தனை பிணை வழங்கி உத்தரவு பிறப்பித்தார்.
நிர்மலா தேவி, முருகன், கருப்பசாமி மூவரையும் வருகின்ற 13ஆம் தேதி மீண்டும் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நிர்மலா தேவியின் வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன், பேராசிரியர் நிர்மலா தேவியை சிறையில் சந்திப்பதற்கு அவரது உறவினர்களுக்கும் வழக்கறிஞராக எனக்கும் சிறைத் துறை அலுவலர்கள் அனுமதியளிக்கவில்லை என்றார்.
சிறையில் வைத்து அவர் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார் என்றும் காயம் வெளியில் தெரிந்துவிடும் என்பதால் அவரை இன்று காவல் துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவில்லை என்றும் குற்றஞ்சாட்டினார்.
மேலும், பேராசிரியர் நிர்மலா தேவி இந்த வழக்கிற்கு தொடர்புடைய அமைச்சர் ஒருவரின் கட்டுப்பாட்டில் இருக்கிறாரோ என்ற சந்தேகம் எழுவதாகவும் பசும்பொன் பாண்டியன் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அமமுகவை கட்சியாக பதிவு செய்ய தடைக்கோரிய வழக்கு: தினகரன், தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு!