விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சின்ன சுரைக்காய்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (28). இவர் கடந்த இரண்டு நாட்களாக காணவில்லை, தொலைபேசியில் தொடர்பு கொண்டபொழுதும் தொடர்புகொள்ள முடியவில்லை எனப் புகார் எழுந்துள்ளது.
இந்நிலையில், இன்று அதிகாலை ராஜபாளையம் புதிய பேருந்து நிலையம் அருகே சங்கரன்கோவில் செல்லும் சாலை ஓரத்தில் உடலின் பல இடங்களில் வெட்டுக் காயங்களுடன் சதீஷ்குமார் காவல் துறையினரால் சடலமாக மீட்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து சடலத்தை ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக காவல் துறையினர் அனுப்பிவைத்தனர்.
சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர் வேறு ஒரு இடத்தில் கொலை செய்து வாகனத்தில் மூலம் கொண்டு வந்து இந்த இடத்தில் சடலத்தை வீசி சென்றுள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது எனத் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, இந்த கொலையின் பின்னணி முன்விரோதமா அல்லது காதல் விவகாரமா என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
கடந்த ஒரு வாரத்தில் தேவதானம் பகுதியில் இரண்டு கொலைகளும் ராஜபாளையத்தில் ஒரு கொலையும் என மூன்று கொலைகள் அடுத்தடுத்து நடந்துள்ளதால் ராஜபாளையம், அதன் சுற்று வட்டாரப் பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.