விருதுநகர் சிபிஐ அலுவலகத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களை இன்று சந்தித்துப் பேசினார்.
அப்போது, "தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பகத்தன்மை தற்போது கேள்விக்குறியாகிவிட்டது. தருமபுரி தொகுதியில் வாக்குச்சாவடியை கைப்பற்றுவோம் என வேட்பாளர் பேசியதால் எட்டு வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு என அறிவிக்கப்பட்டு, அதை 10 வாக்கு சாவடியாகளாக உயர்த்தி, தற்போது எந்த பிரச்சனையும் இல்லாத வாக்குச் சாவடிகளையும் சேர்த்து 43 வாக்குச்சாவடிகளுக்கு மறுவாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் அலுவலர் கூறுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வாக்குப்பெட்டிகளை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்லும்போது வெளிப்படையாகவே எடுத்துச் சென்றிருக்கலாம். அதை ரகசியமாக தேர்தல் ஆணையம் செய்தது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் அர்த்தமற்ற காரணங்களைக் கூறி உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல், தமிழ்நாடு அரசு காலம்தாழ்த்தி வருகிறது" என்று குற்றம்சாட்டினார்.