மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு நாடு முழுவதும் எதிர்ப்பலை எழுந்துள்ளது. காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்பை பதிவு செய்துவருகின்றனர். மேலும், நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் அரசியல் கட்சியினர், கல்லூரி மாணவர்கள், முற்போக்கு இயக்கங்கள், இஸ்லாமிய அமைப்புகள் தொடர்ந்து பல்வேறு கட்ட வடிவங்களில் தங்களுடைய எதிர்ப்பு வெளிக்காட்டி வருகின்றனர்.
விருதுநகரில் 670 அடி நீள தேசியக் கொடியுடன் பேரணி:
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அந்த சட்டத்தை திரும்பப் பெறக் கோரியும், குடியுரிமை திருத்த சட்டத்தை தமிழ்நாட்டில் அமல்படுத்த மாட்டோம். சட்டமன்றத்தில் தமிழ்நாடு அரசு தீர்மானம் நிறைவேற்றக் கோரியும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் இன்று பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் விருதுநகரில் நடைபெற்றது. விருதுநகர் ரயில்வே பீடர் ரோட்டில் தொடங்கிய பேரணி பழைய பேருந்து நிலையம், மேலத்தெரு, கருப்பசாமி கோயில், தெப்பம், நகராட்சி அலுவலக சாலை வழியாக எம்ஜிஆர் சிலையை அடைந்தது. அங்கு குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. பேரணியில் 670 அடி நீளம் உள்ள தேசிய கொடியை ஏந்தி வந்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில், இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் திரளாக கலந்துகொண்டனர்.
இஸ்லாமியர்களை நசுக்கும் சட்டத்தை திரும்ப பெறு:
அதேபோன்று, குடியுரிமை திருத்தச் சட்டத்தினை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தி கிருஷ்ணகிரியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கண்டன பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைப்பெற்றது. கிருஷ்ணகிரி பழையப்பேட்டையில் இருந்து தேசியக் கொடியுடன் பேரணியாக வந்த இஸ்லாமியர்கள், 'இந்தியா எங்கள் தேசம்' என தேச முழக்கத்துடன் புதிய பேருந்து நிலையம் அருகில் கண்டன பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டனர். இஸ்லாமியர் மக்களை நசுக்குகின்ற வகையில் கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தினைக் கொண்டு வந்துள்ள மத்திய அரசின் போக்கினைக் கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இதையும் படிக்க: சி.ஏ.ஏ.வுக்கு எதிராக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்