அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் நேற்று (பிப். 2) ஒருவருக்கு திடீரென வலிப்பு வந்து மயங்கி விழுந்து அங்கேயே உயிரிழந்தார். இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், உடலைக் கைப்பற்றி இறந்த நபர் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், உயிரிழந்தவர் துாத்துக்குடி மாவட்டம் புதூர் அருகே சின்னமநாயக்கன்பட்டியைச் சேர்ந்த மனோகரன் என்பதும், இவர் புதூர் பேரூராட்சியில் தற்காலிக கொசு ஒழிப்புப் பணியாளராகப் பணிபுரிந்துவந்ததாகவும், வெளியூர் செல்வதற்காக அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையத்திற்கு வந்ததாகவும் விசாரணையில் தெரியவந்தது.
அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் மனோகரின் உடல் உடற்கூராய்வு செய்யப்பட்ட நிலையில், கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதால்தான் உடல் சோர்வு ஏற்பட்டு மனோகர் உயிரிழந்ததாகக் கூறி உடலை வாங்க மறுத்து அவரது மனைவி அம்பிகா, உறவினர்கள் மருத்துவமனையில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் மனோகரனின் உடலை தனிச்சிறப்பு வாய்ந்த மருத்துவக் குழு மறு உடற்கூராய்வு செய்ய வேண்டும் எனவும் உடற்கூராய்வை காணொலியாக எடுக்க வேண்டுமெனவும் காவல் துறையிடம் மனு அளித்தனர்.
காவல் துறையினர் அவர்களைச் சமாதானம் செய்ய முற்பட்டபோது, எங்கள் கோரிக்கையை ஏற்கும்வரையில் உடலை வாங்கப்போவதில்லை எனத் திட்டவட்டமாகக் கூறியதால், மனோகரனின் உடல் அரசு மருத்துவமனையிலேயே வைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: எதிர்க்கட்சிகள் இன்றி தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று கூடுகிறது!