மக்களவையில் இன்று (பிப்.13) பேசிய விருதுநகர் மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர் “எனது மக்களவை தொகுதியில் நடந்த பட்டாசு ஆலை வெடி விபத்து மிகுந்த வலியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் 15 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்; பலர் படுகாயமடைந்துள்ளனர்.
பட்டாசு தொழில் மூலம் விருதுநகர் மாவட்டத்தில் சுமார் எட்டு லட்சம் மக்கள் வேலை பெறுகின்றனர். அதுமட்டுமின்றி உள்நாட்டின் 85 விழுக்காடு பட்டாசு தேவையும், வெளிநாட்டிற்கு ஏற்றுமதியும் இந்த மாவட்டத்திலிருந்து தான் நிவர்த்தி செய்யப்படுகிறது. இதன் மூலம் வெளிநாட்டு அந்நியசெலாவணி கிடைக்க பெறுகிறது.
கடந்த 2012ஆம் ஆண்டு முதலிபட்டியில் நிகழ்ந்த பட்டாசு ஆலை வெடி விபத்தின் போது உயிரிழந்த குடும்பத்தினருக்கு, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான அரசு ரூபாய் இரண்டு லட்சம் நிவாரணம் வழங்கியது. பத்து வருடங்களுக்கு பிறகு நேற்று (பிப். 12) நடந்த பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி ரூபாய் இரண்டு லட்சம் நிவாரண நிதியாக அறிவித்துள்ளார்.
பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு ஐந்து லட்ச ரூபாயும், படுகாயமடைந்தவர்களுக்கு ஒரு லட்ச ரூபாயும் நிவராணமாக வழங்க வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.
அதுமட்டுமின்றி, “மத்திய அரசு ஒரு குழுவை அனுப்பி பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆய்வு செய்து, இதுபோன்ற விபத்துகளை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என விருதுநகர் மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர் வலியுறுத்தினார்.
இதையும் படிங்க...விருதுநகரில் மீண்டும் ஒரு பட்டாசு ஆலை வெடி விபத்து - ஒருவர் உயிரிழப்பு