விருதுநகர்: செவல்பட்டி கிராமத்தை சேர்ந்த கலைச்செல்வி(25) இவரது கணவர் இறந்த நிலையில் 2ஆவது திருமணம் செய்து உள்ளார். இவருடைய ஒரு வயது பெண் குழந்தை விற்கப்பட்டதாக கூரைக்குண்டு கிராம நிர்வாக அலுவலர் சுப்புலட்சுமி சூலக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதன் அடிப்படையில் குழந்தையை விற்ற கும்பலை கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகர் அவர்கள் அறிவுறுத்தலின்படி சூலக்கரை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
காவல்துறையினர் கலைச் செல்வி மற்றும் கலைச்செல்வியின் தந்தையான கருப்புசாமி என்பவரிடம் நடத்திய விசாரணையில் குழந்தை இடைத்தரகர்கள் மூலம் மதுரையைச் சேர்ந்த தம்பதியினருக்கு இரண்டு லட்சத்து 50 ஆயிரத்துக்கு விற்கப்பட்டது தெரியவந்தது.
குழந்தையை சூலக்கரை காவல் நிலைய காவல்துறையினர் நேற்றிரவு(பிப்.17) மதுரை மாவட்டம் ஆரப்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே மீட்டனர். மேலும் குழந்தை விற்க பயன்படுத்திய இரண்டு கார்கள் 2 லட்சத்து நாற்பதாயிரம் ரூபாய் பணத்தை சூலக்கரை காவல் நிலைய காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய குழந்தையின் தாய் கலைச்செல்வி, குழந்தையின் தாத்தா கருப்பசாமி, குழந்தையை விலைக்கு வாங்கிய தம்பதியினர் கருப்பசாமி - பிரியா கைது செய்தனர்.
இதற்கு இடைத் தரகராக செயல்பட்ட கார்த்திக், மகேஸ்வரி மாரியம்மாள் மற்றும் கார் ஓட்டுநர் செண்பகராஜன் மற்றும் நந்தகுமார் உள்ளிட்ட ஒன்பது பேர்களை குலக்கரை காவல்துறையினர் கைது செய்து, வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: வீடு புகுந்து நகைக் கொள்ளை: 4 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றவாளி கைது